வகுப்பறையில் ஒரு மாணவன் கேட்கிறான், "முதல் வகுப்பு, யாருடா மச்சான்?'. அதற்கு இன்னொரு மாணவன் சொல்கிறான். ஒரு பட்டப் பெயரை வைத்து அந்த ஆசிரியரைக் குறிப்பிடுகிறான்.
அடுத்த வசனம்- "மச்சான் படிப்பை யாருடா கண்டுபிடிச்சான், அவன் மட்டும் என் கையில் கிடைச்சான், நடு மண்டையில ஆணிய அடிச்சு கட்டிப் போடுவேன்டா'.
இன்னொருவன் "நடுரோட்டுல நிக்க வெச்சு சுடுவேன்'.
"இல்லையில்லை ஓடவிட்டு சுடணும்டா' என்கிறான் இன்னொருவன்.
அப்போதுதான் ஆசிரியர் வருகிறார். ""நான் பிரதமரானால் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதணும், எல்லோரும் நோட்டை எடுங்க'' என்கிறார்.
"சார், வேண்டாம் சார்' என்கின்றனர் மாணவர்கள் கோரஸôக.
"அப்படியானால் நான் ஆசிரியரானால்... என்ற தலைப்பில் எழுதலாமே' என்கிறார்
ஆசிரியர்.
"அப்படியொரு வாய்ப்பு கிடைச்சா, நான் தற்கொலை செய்துக்குவேன்' என்கிறான் மாணவன் (ஆசிரியர் என்ற பிம்பம் இப்படித்தான் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது!).
"சார் எங்கப்பா, 25 லட்ச ரூபாய் கொடுத்து எனக்கு இன்ஜினியரிங் சீட் புக் பண்ணி வெச்சிருக்கார். நான் பிளஸ் 2 முடிக்க வேண்டியதுதான் பாக்கி. எங்கே ஆசிரியராவது?' என்கிறான் ஒரு மாணவன்.
"அப்படியா, வேறொரு பயிற்சி வெச்சிக்கலாம். நீங்க வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் நபரைப் பற்றி....' எனக் கேட்கும்போதே மாணவர்கள் "சச்சின் டெண்டுல்கர், அமலா பால், சிவ கார்த்திகேயன்' என்கின்றனர்.
"யாருப்பா இவங்களெல்லாம்? ஸ்ரீ ஹரிக்கோட்டா விஞ்ஞானிகளா? ஏன், உங்க சிந்தனையெல்லாம் இப்படிப் போகுது? நீங்களெல்லாம் வருங்காலத் தூண்கள்' என்கிறார்
ஆசிரியர்.
அப்போதுதான் மாணவர்கள் தங்களின் மொத்தத் திட்டத்தை விவரிக்கின்றனர்:
""எங்க தாட்úஸ வேற சார். கொஞ்சமா படிக்கணும் நிறைய மார்க் வாங்கணும், ஈஸியா ஜாப் கிடைக்கணும், சம்பளம் நிறைய
கிடைக்கணும்...''
விட்டுப்போனவற்றைப் பாடல் தொடருகிறது:
""சிரமம் ஏதும் இல்லாமலே வேலை கிடைக்கணும்
அந்த வேலையும் செய்யாமலே புவா கிடைக்கணும்
மாசம் முப்பது தேதியானா சம்பளம் கிடைக்கணும்
அட, அதுக்கிடையில் அனுதினமும் "கிம்பளம்' கிடைக்கணும்
போதாதுன்னா போராடவும் கொடியும் பிடிக்கணும்
வேற பொறுப்பு எதிலும் மாட்டிக்காம ஒதுங்கி இருக்கணும்....''
இது இன்றைய மாணவர்களின் போக்கு பற்றிய நாடகத்தின் முதல் கட்டம்.
அடுத்த கட்டம். செல்போன்களால் மாணவர் சமூகம் படும்பாடு...
வெவ்வேறு வேலைகளைச் செய்து கொண்டே போனில் பேசும் பலரும், அப்படியே சிலையாகி நிற்கிறார்கள். மேடையில் பின்னணிக் குரல்கள்.
"செல்போனைக் காதில் வச்சிக்கிட்டே ஒரு பொண்ணு நடந்து போய், குழிக்குள்ள விழுந்துருச்சு...!'
சொல்லும்போதே ஜீன்ஸ் பேன்ட் அணிந்த பெண்ணொருத்தி பேசிக் கொண்டே கீழே விழ, மேடையில் சிலையாகி நின்றவர்களில் சிலர் தூக்கிவிடுகின்றனர். காயங்களுடன் எழுந்த பிறகும் செல்போன் பேசிக் கொண்டே நடக்கிறார் அந்தப் பெண்.
"அப்பா அம்மா தொலைஞ்சா கூட கவலைப்பட மாட்டான் போலிருக்கு, செல்போன் தொலைஞ்சா வாழ்க்கையே தொலைஞ்சிட்ட மாதிரி கவலைப்படுறாங்க இன்றைய இளைஞர்கள்'- பின்னணிக் குரல்.
ஒரே மேடையில் விதவிதமான குடும்பக் கதைகள். அம்மா, அப்பாக்கள் ஏடிஎம் இயந்திரமாக மாற, பணம் கொட்டுகிறார்கள்.
இந்தக் காட்சியைத் தொடர்ந்து, பூங்காவில் இரு முதியவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
"குழந்தைகளைப் படிக்க வெச்சேன். எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இங்கே நாங்க பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்' என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.
"அம்மா இறந்ததுக்கு நிறைய பணம் அனுப்புறேன், ஈமச்சடங்க கிராண்டா பண்ணுங்க, ஆனால் நான் வர முடியாது- முக்கியமான ப்ராஜக்ட்' என்று சொன்ன மகனைப் பற்றி இன்னொருவர் விளக்குகிறார்.
எல்லோரும் சிலையாய் நிற்க...
""கல்வி என்பது வேலைக்குத்தான் என்றுதானே சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அறிவு, பண்பு, ஒழுக்கம் இவற்றையெல்லாம் கல்வி தர வேண்டும் என்று பெற்றோர்களும் எதிர்பார்ப்பதில்லையே''- என்கிறது மேடையின் பின்னணிக் குரல்.
""டாக்டராக்கணும், என்ஜினியராக்கனும் என்று நினைக்கிறோமே, மனுஷனாக்கனும்ன்னு நினைச்சிருக்கோமா? மாற்றத்தை வீட்டிலிருந்தே தொடங்குவோம்'' என்கிறது இன்னொரு குரல்.
""ஆசிரியர்கள் வகுப்பறையில் தொடங்கட்டும், சமூகம் பொதுவெளியில் தொடங்கட்டும், வறண்டு கிடக்கும் இதயங்களில் ஈரம் சுரக்கட்டும், புதிய ஒளியைப் பாய்ச்சுவோம்...'' என்கிறது கம்பீரமான குரல்.
எல்லோரும் தீபம் ஏந்தி நிற்க, பின்னணியில் பாடல். நாடகம் நிறைவடைகிறது. திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அரங்கேறிய நாடகம் தான் இது.
""மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு நிலை, ஊடகங்களின் குறிப்பாக செல்போனின் தாக்கம், பெற்றோர்- குழந்தைகள் உறவு நிலை குறித்து பேசும் இந்த நாடகம், மாற்றத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும்? என்றுச் சொல்வதுடன் முடிகிறது'' என்கிறார் நாடகத்தின் ஆசிரியர் பேராசிரியர் கி. பார்த்திபராஜா.
""மாற்றம் என்பது மந்திரத்தால் விளைவதல்ல, அது கூட்டுப் போராட்டத்தால் விளைவது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
""4 ஆயிரம் மாணவர்கள் கூடும் ஆண்டு விழாவில் சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் ஒரு நாடகம் என்ற அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இப்படியான நாடகங்களை நடத்துகிறோம்'' என்கிறார் பள்ளியின் முதல்வர் க. துளசிதாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.